தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது – இரா. சம்பந்தன்

85 0

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப்பகிர்வை நோக்கிய செயற்பாட்டில் தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒரு வருட கால அவகாசத்துக்குள் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருத்து வெளியிடும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் நீண்டகாலமாக இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் அதற்காக தொடர்ச்சியாக தமது ஆணையை வழங்கியும் வருகின்றார்கள்.

அந்த வகையில், ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வினை தொடர்ந்தும் காலம் கடத்திச் செல்ல முடியாது. அவர்கள் தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

தமிழ் மக்கள் தங்களுடைய கருமங்களை தாங்களே ஆற்றும் வகையில் சுய நிர்ணய அடிப்படையில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் மீளப் பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவது நோக்கி நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.