நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினால் இன்று (24) அதிகாலையோடு நிறைவடைந்த கடந்த 24 மணிநேரங்களில் 1534 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 பேரின் சொத்து விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், 99 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அண்மைக்காலமாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட நடவடிக்கை இன்று (24) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பண்டிகை நாட்களில் விசேட கடமைகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதன் காரணமாக யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்து நாடெங்கும் இடம்பெறும் குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்காக பொலிஸாரினால் யுக்திய விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

