உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் கரிசனை

183 0

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம், இச்சட்டமூல முன்மொழிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரபல துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கியதாக இயங்கிவரும் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.

கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலமானது பயனர்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் தனியுரிமைசார் சுதந்திரம் போன்றவற்றில் பாதிப்பேற்படுத்தக்கூடியவாறான சரத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றது.

இச்சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியமைப்புக்கு ஏற்ப அமைந்திருக்கின்றதா என ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அவற்றில் அநேகமானவை மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளை நிவர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அதன்படி இச்சட்டமூலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார்ந்தோர் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளமையை வரவேற்கின்றோம்.

அதேவேளை இக்கலந்துரையாடல்கள் வெளிப்படையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இச்சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவின் ஊடாக அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதானது ஏனைய அனைத்து சரத்துக்களுடனும் ஒப்பிடுகையில் மிகப்பாரதூரமானதாகும்.

அதுமாத்திரமன்றி ‘பொய்யான கருத்துக்கள்’ மற்றும் ‘தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்’ போன்ற பொதுவான சொற்பதங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது இச்சட்டமூலம் அதிகாரிகளால் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றது.

மிகமுக்கியமான சட்டங்களைத் தயாரிக்கும்போது உரிய நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன பின்பற்றப்படவேண்டும் எனவும், குறிப்பாக சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

ஆகவே நிகழ்நிலைக்காப்பு சட்டமூல முன்மொழிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.