ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயமானது இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுத்தமைக்கு ஒப்பானது

27 0

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயமானது இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுத்தல் போன்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அடிப்படை மூலோபாய விடயங்கள் சிலவற்றை கிங்ஸ்பெரி ஹோட்டலில்  நடந்த உள் நாட்டு இறைவரி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைத்து உரையாற்றினார்.

ஜனாதிபதி கூறிய மூலோபாயம் ஒன்று வெளிநாடுகளுடன் வர்த்தக உடனபடிக்கைகளை மேற் கொள்ளுதல் குறிப்பாக இந்தியா, சீனா, தாய்வான் , யப்பான் போன்ற நாடுகளிடம் எதிர்காலத்தில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதல் இரண்டாவது ஐயிரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவை விரிவுபடுத்தல் மூன்றாவது நாட்டின் அனைத்து துறைகளையும் டிஐிற்றல் மயப்படுத்தல் அதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாயம் இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்பதற்கானது அல்ல, இவை அரசியல் அமைதி உடைய , ஊழல் அற்ற ஆட்சியாளர்களை கொண்ட நாடுகளுக்கோ பொருத்தமான மூலோபாயங்கள் மாறாக இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும்.

இலங்கையின் பொருளாதாரம்  தற்போது தலைகீழாக கிடக்கின்றது அதனை நிமிர்த்தி இருத்த முதல் கட்டம் ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அடிப்படை மூலோபாயம் முதலாவது இனப்பிர்ச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு இரண்டாவது ஊழல் வாதிகளின் ஊழல்ப் பணங்களை நாட்டின் திறைசேரிக்கு கொண்டு வருதல் மூன்றாவது ஊழல் வாதிகளை தண்டித்தல் தடுப்பதற்கான சட்டங்களை சட்ட ஓட்டை இன்றி நடைமுறைப்படுத்தல் எனவே இவ்வாறான  மூலோபாயங்களே வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அடிப்படைகள்.

மேலும் வரிகளை அதிகரித்து சொந்த மக்களை கருவறுத்து உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்காது தொடர்ச்சியான கடன்களை பெற்றுக் கொண்டு சந்தர்ப்பவாத கால எல்லைகளை கூறி அந்நியச் செலாவணி வருமானத்தை பெற்றுக் கொள்ளாமல் பொருளாதாரம் பற்றி கதைப்பது தேர்தல் இலக்குகள் மட்டுமே இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.