நீதிமன்ற தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியமைக்க மக்கள் இடமளிக்கப் போவதில்லை

36 0

நாடு வங்குரோத்தடைந்தமைக்கு காரணமானவர்கள் யார் என்பது அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு வங்குரோத்து நிலைமையை அடைவதற்கு யார் காரணம் என்று நீதிமன்றம் அண்மையில் தெளிவான தீர்ப்பினை வழங்கியது. உலகில் எந்தவொரு நீதிமன்றமும் இவ்வாறானதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளதாக நான் அறியவில்லை. அவ்வாறானவர்கள் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு மக்களின் மனசாட்சி இடமளிக்கும் என்று நான் நம்பவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அவர்கள் அரசியலிலிருந்து விலகி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற செய்தி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை எந்தவொரு ஜனாதிபதியும் செய்யாத விடயமொன்றை நான் செய்தேன். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கினேன். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நான் அதிகாரங்களை தானம் வழங்கினேன்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பின்னர் சகல நாடுகளுடனும் இராஜதந்திர நட்புறவுகளைப் பேணக் கூடிய இயலுமை என்னிடம் மாத்திரமே காணப்பட்டது.

எனது ஆட்சி காலத்தில் நான் மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தவில்லை. போதைப்பொருளுக்கு எதிராகவும், ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தேன் என்றார்.