நாடு ஒன்று முன்னேறுவதற்கு அடிப்படை தேவையாக இருப்பது சட்டத்தின் ஆட்சியாகும். ஆட்சியாளருக்கு ஒரு சட்டமும் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் என்றால் அந்த நாடு முன்னேறப்போவதில்லை. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தமையாலே நாடு இயல்பு நிலைக்கு மாறியது. அவ்வாறு இல்லாவிட்டால் நாடு பாரிய பாதாளத்தில் விழுவதற்கு இடமிருந்தது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த சில ஆண்டுகளாக, நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைந்த யுகத்திலேயே நாம் வாழ வேண்டியிருந்தது. கொவிட் தொற்று, அரசில் நெருக்கடி காரணங்களால் மக்கள் பாரிய அழுத்தங்களுக்கு ஆளாகினர். நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று கருத்து தெரிவிக்கும் எந்த அரசியல் வாதியும் இந்த நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை. எமது திறைசேரியில் டொலர் இல்லாமல் போனது. எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியிலேயே நாங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்றோம்.
நாங்கள் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தோம். நாங்கள் எதிர்பார்த்த இலக்குக்கு நாட்டை கொண்டு வந்தோம். நாடு வீழ்ச்சியுற்றிருந்த ஒன்றரை வருட காலத்தில் நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 97 வீதமாக இருந்தது. ஆளும் அரசாங்கம் பணவீக்கத்தை நூற்றுக்கு 3வீதம் அளவுக்கு கொண்டுவந்துள்ளோம். மீண்டும் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு செல்ல இடமளிக்க முடியாது. அது எங்கள் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பும் கடமையுமாகும்.
நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது, ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி பேசுகிறோம். நீதி அனைவருக்கும் சமம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறு இடம்பெறுவதில்லை. நாடு ஒன்று முன்னேறுவதற்கு அடிப்படை தேவையாக இருப்பது சட்டத்தின் ஆட்சியாகும். ஆட்சியாளருக்கு ஒரு சட்டமும் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் என்றால் நாடொன்று முன்னேறப்போவதில்லை. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியதன் மூலமே மாத்திரமே அந்த நிலைக்கு வந்துள்ளன.
நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தோம். இந்த நாட்டின் பொலிஸ் அரச சேவை சுயாதீனப்படுத்தினோம். எமது நாட்டின் முன்னேற்றத்துக்கு பிரதான தடையாக இருப்பது ஊழல் என்பதே உலக நாடுகளின் கருத்தாகும். அரச நிதி பயன்பாட்டில் அதிக மோசடி இடம்பெறுவது பெறுகை கோரல் செயற்பாட்டிலாகும். அதனை தடுப்பதற்கு பெறுகை ஆணைக்குழு அமைத்தோம். இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதை நிறுத்த வேண்டும் என ஆளும் எதிர்கட்சி அனைவரும் தெரிவித்தார்கள். என்றாலும் அது தொடர்பான சட்டத்தை கொண்டுவர யாரும் முன்வரவில்லை.
அத்துடன், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு அமைய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரித்தோம். ஊழலுக்கு எதிராக பேசினாலும் சட்ட மூலத்தை கொண்டுவந்தபோது அது தொடர்பில் பேசிய பல அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அந்த சட்டமூலத்தை அனுமதித்துக்கொண்டோம். அதேபோன்று தேர்தலில் இடம்பெறும் ஊழலை தடுப்பதற்கு தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டுவந்தோம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் நாங்கள் அனுமதித்துக்கொண்டோம். தேர்தலில் வெற்றிபெறுவதாக இருந்தால் அதிக வாய்ப்பு இருந்தது ஊழல் வாதிகளுக்காகும். குண்டர்கள், பாதாள குழுக்களின் பலம் இருந்தவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். நாங்கள் அந்த கலாசாரத்தை இல்லாமலாக்க தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டத்தை அனுமதித்துக்கொண்டாேம்.
அத்துடன் நாங்கள் இந்த நாட்டில் ஊழலை தடுப்பதற்கு சட்டம் அறிமுகப்படுத்தியதாலே சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பிரஜைகள் எமது நாடு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார்கள். நாட்டுக்குள் இடம்பெற்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். நாணய நிதியத்தின் உதவி கிடைத்தமையாலே நாடு இயல்பு நிலைக்கு மாறியது. அவ்வாறு இல்லாவிட்டால் நாடு பாரிய பாதாளத்தில் விழுவதற்கு இடமிருந்தது என்றார்.

