உலக வங்கியின் உதவியுடன் தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படும்

44 0

தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மழைக்காலங்களில் மழைநீர்வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஏரி, கால்வாய்களை ஆழப்படுத்தி தூர் வாரவும், தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும், உரிய தடுப்பணைகளை கட்டவும் வலியுறுத்தி சென்னை செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுமாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் மற்றும் சிறப்பு அரசு ப்ளீடர் ஆர்.அனிதா ஆகியோர் ஆஜராகி, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,தூய்மைப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுதரப்பில் பதில்மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மண்டல, மாவட்ட, மாநில அளவில் குழுக்களை அமைத்து, கடந்த 2022 பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி 20,150 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்பு இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கேரளா, ஆந்திராவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் மீறப்படும்போது தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலைகள் மராமத்து மற்றும் புதுப்பிப்பு, சீரமைப்பு திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி நிதியுதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு, அவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட உள்ளன.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதை பதிவு செய்து கொண்டநீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.