இந்த ஆண்டு 8000 ஹெக்டேயர் நெற்செய்கை நிலப்பரப்பு நோய்த் தாக்கத்தால் பாதிப்பு

26 0

கிளிநொச்சி மாவட்ட பெரும்போக நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கங்களை நேரில் சென்று ஆராய்வதற்காக கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் சூரியகுமார் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட குழுவினர் நேற்று (13) வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு நகர் போன்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.

இதன்போது விவசாயப் பணிப்பாளர் நோய்த் தாக்கங்களுக்கான தீர்வினையும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

அத்தோடு அவர்,

தற்பொழுது அநேகமான பகுதிகளில் கிருமிநாசினி விற்பனை நிலையங்களில் காலாவதியான கிருமிநாசினிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை அவதானிக்காத சில விவசாயிகள் தொடர்ச்சியாக காலாவதியான கிருமிநாசினிகளை பயன்படுத்தி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன், கிருமிநாசினிகளில் ஒட்டப்பட்டுள்ள காலாவதி திகதிகளை சரியாக உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், தங்களது பயன்பாட்டுக்கு அவற்றை கொள்வனவு செய்ய வேண்டும்.

அத்துடன், நோய்த்தாக்கங்கள் ஏற்படும்போது அருகில் உள்ள கமநல சேவை விவசாய போதனை ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைய, கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும்.

தற்பொழுது பயிர்களிடை‍யே பரவும் நோய்த் தாக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 8.000 ஹெக்டேயர் அளவு பயிர் நிலங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.