கண் வைத்தியசாலை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

21 0

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று  வியாழக்கிழமை (14) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டு வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் காலை சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹீபாலவுடன் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே வைத்தியசாலை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரால் இதன் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமையவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபிக், பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜீ.பி.படவல உட்பட வைத்தியசாலையின் ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.