கொக்குவில் மாணவனது மரணம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

53 0

அண்மைக்காலமாக கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் மரணங்கள் தொடர்பாக புலனாய்வுகளையும் விசாரணைகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது மேற்கொண்டு வருகின்றது.

நடைபெற்று வந்த விடயங்களை முன்வைத்து பார்க்கின்ற போது சிறுவர் தடுப்பு முகாம் மற்றும் சிறுவர்களை கல்வி மற்றும் சமய கற்கைகளுக்காக தடுத்து வைத்துள்ள முறைமையையும் அந்நிலையங்களின் தராதரத்தையும் பரிசீலனை செய்து வருகின்றது.

இந்த வகையில் கொக்குவில் மாணவனது மரணம் தொடர்பாகவும் நிலையங்களை பரிசீலனை செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறுவர் தொடர்பான கடமைப்பாடுகளையும் பொறுப்புக்கள் தொடர்பாகவும் கண்டறிந்து ஒருநிலைப்படுத்துவதற்காக விசாரணை ஒன்று இன்று புதன்கிழமை (13)கல்முனை பிராந்திய காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ,மாவட்ட நன்னடத்தை அதிகாரி ,மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரி, சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர், பிராந்திய சுகாதார சேவை பணிமனை பொறுப்பதிகாரி (RDHS),பெண்கள் சிறுவர் பிரிவு (Kalmunai Head Quates police staion),ஆகிய தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த விசாரணையானது மரணமடைந்த சிறுவனின் தந்தையான நாராயண ஆனந்த தேவனின் முறைப்பாட்டிற்கமைய மேற்படி தரப்பினருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.