நல்லாட்சியாளர்கள் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள்

243 0

ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமக்குள் இருக்கும் தேசத்துரோக எண்ணம் காரணமாகவே இந்த அறிக்கையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை தவிர வேறு காரணங்கள் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த வாரம் முடிவடைந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது.இதனடிப்படையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாதிகள், விசாரணையாளர்களுடன் கூடிய போர் குற்ற விசாரணை நீதிமன்றத்தை ஸ்தாபிக்க உள்ளனர்.

இப்படியான நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல சாட்சியங்கள் இல்லை என்ற போதிலும், சந்தேகத்திற்குரிய முப்படை அதிகாரிகளை நிர்வாக செயற்பாட்டின் மூலமாக சேவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு, மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளனர்.மேலும் இலங்கை படையினருக்கு எதிராக ஸ்தாபிக்கப்படும் போர் குற்ற விசாரணை நீதிமன்ற பொறிமுறைக்கு மேற்குலக நாடுகளிடம் இருந்து நேரடியாக நிதியை பெற்றுக்கொள்ள இடமளிக்கவும் அரசாங்கம் மீண்டும் இணங்கியுள்ளது.

இலங்கை படையினருக்கு எதிராக வழக்காட வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி கூறிய போதிலும், ஜெனிவாவில் இவர்கள் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதி இதற்கு முற்றிலும் மாறானது.இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினர் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகி எண்ணத்துடன் செயற்பட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.