வியாபாரிகளை பதிவு செய்யும் போது இடையூறு- மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு

140 0
வலிகாமம் மேற்கு பிரதேசசபையால் வியாபாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது வியாபாரிகள் சிலர் வெளியாட்களுடன் இணைந்து இடையூறு விளைவித்துள்ளதால் இது தொடர்பில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சங்கானை மரக்கறி சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை பதிவு செய்து  அவர்களை அடையாளப்படுத்தி வியாபார நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கும் இலகுவாக்குவதற்கும் பிரதேச சபை  வியாபாரிகளின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதற்கு தடையேற்படுத்தும் வகையில் வியாபாரிகள் சிலரும் அவர்களுடன் இணைந்த வெளியாட்கள் சிலரும் இணைந்து பதிவுகளை மேற்கொண்டுவரும் பிரதேச சபையின் அரச உத்தியோகத்தர்களுடன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை தாக்குவதற்கும் முயற்சித்தும் உள்ளார்கள்.

குறிப்பாக பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வருமானப் பரிசோதகர்,சந்தை மேற்பார்வையாளர், சுகாதாரத் தொழிலாளி என மூவர் பதிவுகளை மேற்கொண்ட நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் வியாபாரம் செய்யும்போது சில பிரச்சினைகள் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுவதால் பிரதேச சபை இதனை கருத்தில் எடுத்து  பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வியாபாரிகளை அடையாளம் காண்பதற்கும் அவர்கள் வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகளை  பிரதேச சபை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை குழப்பும் வகையில்  சில வியாபாரிகள் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களை கூறி தாக்க முற்பட்டு  அரச உத்தியோகத்தர்களது பணியை செய்யவிடாது தடுத்துள்ளார்கள் இவற்றுக்கு  எதிராக பொலிசார்   சட்ட நடவடிக்கை  எடுக்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும்  என கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

இதேவேளை, இத்தகைய பிரச்சினைகள் அடிக்கடி  இடம்பெற்றுவருவதுடன் வெளியாட்களின் அச்சுறுத்தல்கள்  அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவைதொடர்பில்  பொலிசாரிடம் முறையிட்டால் எத்தகை நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்ரச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.