மலையக பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகளுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் எந்த பாரபட்சமுமின்றி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கிறேன். அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மலையக பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் அங்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் அதிகளவிலான ஆசிரியர்கள் அந்த பிரதேசங்களில் இருந்து உருவாவதற்கான நிலைமை ஏற்படும். அத்துடன் 2500 ஆசிரிய உதவியாளர்களை அங்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அடுத்த வருடத்தில் அது இடம்பெறும்.
அந்த வகையில் கல்வி பொது தராதர உயர் தரத்தில் சித்தியடைந்தவர்கள் இதில் உள்வாங்கப்படுவார்கள்.
குறிப்பாக பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அடுத்த வருடத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி எமக்கு கிடைக்கவுள்ளது. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அந்த நிதியை செலவிட எதிர்பார்த்துள்ளோம். அந்த விடயத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கணினி, மடிக்கணினி, போட்டோ பிரதி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்களையும் அங்கு முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம் சிறந்த எதிர்கால சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான நிலைமை அங்கு உருவாகும்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் சமய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இந்து சமயத்தை முஸ்லிம் ஆசிரியர் கற்பிப்பதாக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ் சபையில் தெரிவித்தார்.
இந்து சமயத்தை முஸ்லிம் ஆசிரியரும் முஸ்லிம் சமயத்தை இந்து ஆசிரியரும் கற்பிக்கும் அவ்வாறான எத்தகைய நிலையும் அங்கு காணப்படவில்ல என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் அவ்வாறு இருந்தால் அது தொடர்பில் அறிவித்தால் கவனம் செலுத்துவேன் என்றார்.

