2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அப்படியானால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் எவ்வாறு பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென எதிரணியின் சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
புதிய பல்கலைக்கழங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இதில் முதலாவது பிரச்சினை , பல்கலைக்கழகங்களை உருவாக்கி அவற்றுக்கான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை வழங்கும் இயலுமை மாகாண சபைகளுள்ளதா என்பது அடுத்து பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படும் என்றால் அந்த மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.
தற்போது நாட்டில் உள்ள மாகாண சபைகள் அனைத்தும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
அங்கு மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.இவ்வாறான நிலையில் மாகாண சபைகளினால் எப்படி பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும்? அவ்வாறு மாகாண சபைகளைக்கொண்டு பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்க விரும்பினால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.
இதேவேளை இன்று மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மூளைசாலிகளின் வெற்றிடத்தை நிரப்ப எமக்கு இன்னும் இரண்டு பரம்பரை தேவைப்படும். முன்னர் பல்கலைக்கழக கலாநிதிகள்,பேராசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் அவர்கள் 7,8 மடங்கு சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து நாட்டிலிருந்து வெளியேற முற்படவில்லை.
ஏனெனில் பணியில் அவர்களுக்கு திருப்தி இருந்தது. ஆனால் தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு சம்பளம் போதாது. அத்துடன் பாரிய வரி விதிப்புக்களினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அது மட்டுமன்றி அவர்கள் தமது பணியில் திருப்தியடைய முடியாதவாறு பல்கலைக்கழகங்களில் பெரும் வளப்பற்றாக்குறைகளும் உள்ளன.
எனவே பல்கலைக்கழகங்களிலுள்ள ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மானியங்கள் ஆணைக்குழுவின் கடமை என்றார்.

