ஆசிரியர்- அதிபர் சேவையின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கினால் மாணவர்களுக்கு இலவச பாடநூல், சீருடை விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிடுவது பாரதூரமானது.
கல்வித்துறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் கல்வி அமைச்சர் எதிரணியின் பக்கம் வர வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் எதிர்காலம் பிள்ளைகள் என்று குறிப்பிடப்படுகிறது.ஆனால் பிள்ளைகளுக்கான சிறந்த சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.கல்வி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது,ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.
கல்வி துறையில் ஏற்படுத்த வேண்டிய பல சிறந்த மாற்றங்களை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ளார்.மாற்றங்களுக்கான திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.அதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.கல்வித் துறையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் கல்வி அமைச்சர் எதிரணி பக்கம் வர வேண்டும்.
அதிபர் – ஆசிரியர் சேவையின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கினால் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிடுவது பாரதூரமானது.ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தேசிய பாடசாலை கொள்கை திட்டம் பாடசாலைகளின் நுழைவாயிலுக்கும், பாடசாலையின் பெயர் பலகைக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இவ்வாறான தூரநோக்கமற்ற திட்டங்களை எதிர்காலத்தில் செயற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

