பதுளை – அப்புத்தளை பிரதேசத்தில் யஹலபெத்த பாலத்திற்கு அருகில் தாக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹப்புதளை, யஹலபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் நேற்று (03) இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பாததால் அவரது வீட்டார் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போது இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இவரது கையடக்கத்தொலைபேசி, குடை மற்றும் பாதணிகள் என்பன சம்பவ இடத்திற்கு தொலைவிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் தியதலாவை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியதலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

