வெப்ப வலயக் காலநிலை அபிலாஷை தொடர்பில்ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்

148 0

வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகளுக்கான திட்டத்துக்கு மாலைதீவு, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட ஒரு நிபுணர் குழுவை நியமிக்க முன்மொழிவதாகவும், அக்குழுவின் ஆய்வுகளை பிரேசிலில் கோப்30இல் முன்வைக்க பரிந்துரைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோப்28 மாநாட்டில் முன்வைத்து உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

காலநிலை நிதியங்களில் மாதிரி அடிப்படையிலான மாற்றம் மற்றும் பயனுள்ள பிரதிபலன்களை அடைவதற்கு பலதரப்பு அணுகுமுறையின் தேவை ஆகியவை இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு வழிவகுத்தன.

2030ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்கான நிச்சயமற்ற தன்மைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த தீர்மானமிக்க இலக்கை அடைவதற்கான 50 வீத வாய்ப்பு காணப்படுகிறது. அதற்காக ஏனைய நாடுகளிடம் இருந்து நிதி உதவி கிடைப்பதை எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெப்பவலய மற்றும் வெப்பவலயமற்ற நாடுகளுக்கும் அரச மற்றும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.

வெப்பவலய காலநிலை அபிலாஷைகள் திட்டம், காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற அத்தியாவசிய இயற்கை வளங்களை மையமாகக் கொண்ட முதலீடுகளை ஈர்ப்பதே வெப்ப வலய காலநிலை அபிலாஷைகள் திட்டத்தின் நோக்கமாகும். உலக வெப்பமயமாதலை எதிர்ப்பதற்கு இந்த முதலீடுகள் அவசியமாகும்.

இதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு எதிராக வருடாந்தம் செலவிடப்படும் டிரில்லியன் கணக்கான டொலர்களை மீதப்படுத்த முடியும். இதற்காக தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை உருவாக்குவதற்கும் இந்து சமுத்திர ரிம் சங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது முக்கியத்துவமுடையதாகும்.

வெப்பவலயக் காலநிலை அபிலாஷைகள் திட்டம் மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்துக்கான முயற்சிகள் உலகின் மிகப் பெரிய கார்பன் உறிஞ்சுதலை உருவாக்கும். மாலைதீவு, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போது, இந்த வேலைத்திட்டத்தில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

வெப்பவலயக் காலநிலை அபிலாஷைகளுக்கான திட்டத்தை ஆராய்ந்து அறிக்கையிட ஒரு நிபுணர் குழுவை நியமிக்க முன்மொழிகின்றேன். மேலும் அக்குழுவின் ஆய்வுகளை பிரேசிலில் கோப்30இல் முன்வைக்கவும் பரிந்துரைக்கின்றேன் என்றார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்துக்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது முன்வைத்தார். காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் மையப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்கான இடத்தை உருவாக்குதலே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குத் தேவையான நிதியை சேகரிப்பதற்காக பாரம்பரிய சிந்தனைகளிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான வழிகாட்டலை இந்த சர்வதேச பல்கலைக்கழகம் வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவும் இலங்கையின் திட்டத்தைப் பாராட்டிய மெல்கம் டர்ன்புல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தைப் பாதுகாப்பது அந்த நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும் என்றும் தெரிவித்தார்.