வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வர்த்தக தம்பதியை படுகொலைச் செய்து பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த 19 வயது இளைஞனை, கிளிநொச்சி உருத்திரபுரத்தில் வைத்து கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கடந்த 30ஆம் திகதி இரவு, வியாபார நிலையத்துடன் இணைந்ததாக உள்ள தங்குமிடத்தில் வைத்து வர்த்தகர் மற்றும் அவரது மனைவியை கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் (வயது 70) என்பவரும் அவரது மனைவி வர்ணகுலசிங்கம் நாகலஷ்மி (வயது 68) என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வர்த்தகர் தன்னுடைய வர்த்தக நிலையத்தை மூடுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த போது, அந்த வர்த்தக நிலையத்துக்கு இரகசியமாக நுழைந்த அவ்விளைஞன், அங்கு மறைந்து இருந்துள்ளார். வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு சென்றதன் பின்னர், வர்த்தக நிலையத்தை நோட்டமிட்டு, பண பெட்டகத்துக்கு அருகில் சென்றுள்ளார்.
எனினும், வர்த்தக நிலையத்துக்குள் யாரே நடமாடுவதை உணர்ந்த, வர்த்தகரின் தந்தை சத்தம் போட்டுள்ளார். அதன்பின்னரே, இவ்விருவரையும் படுகொலைச் செய்துவிட்டு, அவ்விளைஞன் தப்பிச்சென்றுள்ளார் என விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.

