எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்வதில் இலங்கை கிரிகெட் சபை பாரிய மோசடி

141 0

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும்  எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை  (01) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை கிரிக்கெட் சபை பல்லேகல,தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60×30 அடி எல்.ஈ.டி. திரைகளுக்காக கொள்வனவு பதிவு செய்துள்ளது.

2023 ஜூலை 14,ஆம் திகதி விலைமனு திறப்பதற்கு முன்னரே, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஜூலை 13 ஆம் திகதி இதற்காக 29,000 டொலர் தொகையை செலுத்தியுள்ளது.

இந்த விலைமனு கோரலுக்காக Million Laugh Entertainment, Imagine Entertainment,Atom Technologies மற்றும் John Keells Automation ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றிருந்தாலும் Million Laugh Entertainment மற்றும் Imagine Entertainment ஆகிய இரு நிறுவனங்களே இறுதியாக விலை மனுக்களை முன்வைத்துள்ளனர்.

இங்கு,Million Laugh Entertainment நிறுவனத்தின் கேள்வியாக 360 மில்லியன் ரூபாவும் ,Imagine Entertainment நிறுவனத்தின் கேள்வியாக 335 மில்லியன் ரூபாவாகவும் இருந்துள்ளது.

Imagine Entertainment பத்திரங்களில் கையெழுத்தொன்று இல்லை என்று கூறி இந்த விலைமனு கோரல் 25 மில்லியன் நஷ்டத்துடன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்குவதற்காக  Million Laugh Entertainment நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது,இந்த 3 மைதானங்களுக்கும் கொண்டு வரப்பட்ட எல்.ஈ,டி. திரைகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏனெனில் இதற்கான வரியாக 65 இலட்சம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது,29,000 டொலர்கள் மையப்படுத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக வரி செலுத்தப்பட்டுள்ளது. இந்த 3 திரைகளுக்கும் குறைந்தது 150,000 டொலர்கள் வரியாக செலுத்தப்பட வேண்டும்.

ஆனால் இன்று அரசுக்கு வருமானம் இல்லாததால்,பெறுமதி சேர் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அரசாங்கம் அதிகரித்துள்ளது. மக்கள் மீது கடும் வரிச்சுமையை சுமத்தி அரசுக்கு வரவேண்டிய வருவாயை இதுபோன்ற ஊழல் நிறுவனங்கள் திருடுகின்றன.

இந்த ஊழல் கும்பலை நீக்க பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினாலும்,இதனால் எதுவுமே நடக்க வி்ல்லை. அதனால் இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.