தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023

1874 0

மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo) அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை யேர்மன் தமிழ் பெண்கள்அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. தமிழினி பத்மநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அந்தவேளையில் கொடியேற்றப்பாடல் இசைக்கப்பட்டது. பாடலின் உணர்வுகள் தமிழீழத்தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும் மனதை பதியம் வைத்தது. தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ஆம் ஆண்டின் மாவீரர் உரையிலிருந்து சிறு பகுதி ஒளிபரப்பப்பட்டது. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூரநோக்குப் பார்வையின் வெளிப்பாடக அமைந்தது. தலைவர் அவர்களது 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப் பட்டது. இன்று நாம் எதிர் கொள்ளும் தடைகளையும், அதற்காக நாம் ஆற்றவேண்டிய பணிகளின் அவசியம் பற்றியும் இவ்வறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டது.

இதனை அடுத்து எமது தேசத்தின் உயிரீகத்தெய்வங்களின் துயிலுமில்லத்தில் அகவணக்கம் செய்யப்பட்டு துயிலுமில்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை 24.06.1997ஆம் ஆண்டு அன்று வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லரி, மோட்டார், ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்களின் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திரவியம் அமுதினி எனும் இயற்பெயர் கொண்ட லெப்.நித்தியா அவர்களின் தாயார் திருமதி. திரவியம் செவ்வந்திமலர் அவர்கள் ஏற்றி வைத்தார். அந்தவேளையில் மாவீரர் குடும்பங்கள் சுடர் ,மலர் வணக்கத்தை இதயம் வெதும்பும் உணர்வோடு துதித்து வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும் மாவீரர் உணர்வுடன் தமது சுடர்,மலர் வணக்கத்தை செலுத்தி உணர்வேற்றிக்கொண்டனர். துயிலும் இல்லத்தில் விளக்கேற்றும் நேரத்தில், எமது மாவீரமணிகளின் எழுச்சிப்பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டு மென்மேலும் உணர்வினை ஊட்டி ஆழ்மனதில் மாவீரர்களின் தியாகங்களை உரமூட்டியது.

யேர்மனிக் கிளையின் மாவீரர் பணிமனை ஒவ்வொரு வருடமும் மாவீரர்களினதும் ,எமது தேசத்தின் விடுதலை பற்றிய அறத்தைத் தாங்கிய இதழாக “கார்திகை தீபம் ” எனும் இதழை வெளியீடு செய்து வருகின்றனர். அவ்விதழை இவ்வருடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளர் திரு இரா.இராஜன் அவர்கள் வெளியீடு செய்ய, தமிழ்க் கல்விக்கழகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு.சேரன் யோகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் அனைத்துலக செயலகத்தின் வெளியீடான “மாவீரம் பேசும் காற்று” எனும் பாடல் தொகுப்பின் தகவல் சேமிப்பானை (USB) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியீடு செய்ய திரு.சக்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் வெற்றிக்கிண்ண போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பின் போது வெற்றிபெற்ற தமிழாலய மாணவர்கள் தமது அறுவடையின் வெற்றிக்களிப்பின் உச்சத்தை தொட்டனர்.அத்தோடு தமிழத்திறன் போட்டிகளில் யேர்மன் தழுவிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதோடு, அவர்களது பேச்சும், கவிதையும் மாவீரர் அரங்கினை மேலும் எழுச்சி ஊட்டியது. உணர்வின் வேர்களை ஆளும் பேர்லின் (Berlin) கலைஞர்களின் உணர்வூட்டிய நாடகமும், எமது தேசியத்தின் வரலாற்றுப்பதிவாக யேர்மன் இளையோர் அமைப்பால் ஒளிபரப்பப்பட்ட வரலாற்றுப் பதிவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இடதுசாரிக் கட்சியின் உறுப்பினரும் குர்திஸ்தான் அமைப்பின் Baden-Württenberg இணைப்பாளருமாகிய திரு. டென்னிஸ் ஸ்டோஸ் (Dennis storz) அவர்களும், Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo)அவர்களும் விடுதலை பெறும்வரை சோர்வின்றி போராடவேண்டியத்தின் அவசியத்தினை வலியுறுத்தி யேர்மன் மொழியில் உரையாற்றினார்கள்.

அத்தோடு யேர்மன் பெண்கள் அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் சார்ந்தும், தமிழீழப் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் தொடர்ந்தும் நடத்தப் பட்டுவரும் அநீதிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் மாவீரர் நாளின் சிறப்பு உரையினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். இன்றைய அரசியல் நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையினை எடுத்தியம்பும் பேச்சாக அவரது சிறப்புரை அமைந்திருந்தது. மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளின் நிறைவாக யேர்மன் தமிழர் கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களது “உணர்வின் அலைகள்” எனும் நாட்டியத் தொகுப்பு எழுச்சி ஊட்டும் வகையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வுகளின் நிறைவாக இளையோர் அமைப்பினர் ஒன்றிணைந்து மக்களோடு உறுதிமொழியினை எடுத்துக்கொண்ட பின்னர் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப்பாடலோடு 2023ஆம் ஆண்டின் மாவீரர் வணக்கநிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவேறியது .