கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

264 0
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ப.கார்த்திகேயன் ஒழுங்கமைப்பில் மக்கள் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், பொலீஸார்,சுகாதார பிரிவினர் என பலதரப்பினர்களும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று  (29) இலிருந்து வரும் நான்காம் திகதி வரை மேற்படி டெங்கு ஒழிப்பு  நடைக்குழுவினர் மக்களது சென்று டெங்கு நோய்காவும் நுளம்புகள் உள்ளனவா, அந்த நுளம்புகள் வளரக்கூடிய வாழ்விடங்கள் உள்ளனவா எனப் பார்வையிட்டு ஆலோசனை வழங்குவார்கள்.
கிளிநொச்சியில் சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் நாளாந்தம் சராசரியாக 650 பொதுமக்கள் வருகைதரும் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு, கடந்த 18.02.2017 லிருந்து 18.03.2017 வரையான ஒருமாதகாலப் பகுதியினுள் நாளாந்தம் சராசரி 1250 தொடக்கம் 1750 நோயாளர்கள் வருகைதந்திருந்தனர்.
வைத்தியசாலை விடுதிகளில் தினமும் சராசரியாக 5 தொடக்கம் 10 நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலையில், மேற்படி நோய்களின் தாக்கம் அதிகரித்திருந்த காலப்பகுதியில் சராசரியாக 25 தொடக்கம் 40 நோயாளர்கள் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
18.02.2017 லிருந்து 18.03.2017 வரையில் மாவட்டப் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 52616 பொதுமக்கள் சிகிச்சை பெற்றிருந்தனர். இவர்களுள் 146 டெங்கு நோயாளிகளும் 234 இன்புளுயன்சா (ர்1N1) நோயாளிகளும் இனங்காணப்பட்டு விடுதிகளில் அனுமதிக்கப்பட்டனர்
வைத்தியசாலைக்கான பொதுமக்கள் வருகையின் இந்தச் சடுதியான அதிகரிப்பினைத் தாங்கிநின்று பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத்திணைக்களத்தின் சுகாதார சேவை உதவியாளர்களிலிருந்து வைத்திய நிபுணர்கள்வரை, ஆய்வுகூட உதவியாளர்களில் இருந்து அலுவலக உத்தியோகத்தர்கள் வரை அர்ப்பணிப்பு மிக்க பணியாற்றியிருந்தனர்
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 2016ம் ஆண்டில் மொத்தமாக 86 டெங்கு நோயாளிகளே இனங்காணப்பட்டிருந்தனர். ஆனால், 2017ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் (24.03.2017) மொத்தம் 304 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 எனவே டெங்கு நோயை கட்டுப்படுத்த நோய் வருமுன் காக்கும் நடவடிக்கையே சிறந்தது எனவும் மக்கள் தங்கள் வீடுகளிலும்,சுற்றயல்களிலும் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் இருப்பதனை தவிர்க்கும் வகையில்  செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.