அரசியலமைப்புப்பேரவை தொடர்பான ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு கடும் கண்டனம்

33 0

அரசியமைப்புப்பேரவையின் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைவு, மக்களின் ஆணையின்றி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவரின் எதேச்சதிகாரப்போக்கு படிப்படியாக மேலோங்கிவருவதை அவதானிக்கமுடிவதாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் அங்கம்வகிக்கும் சட்டத்தரணிகள் கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டின் அரசியலமைப்புப்பேரவை மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாராளுமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,அரசியலமைப்புப்பேரவையானது நிறைவேற்றதிகாரத்தின்கீழ் வருவதாகக் கூறியதன் மூலம் அப்பேரவையின் நோக்கத்தை முற்றுமுழுதாகத் தவறாகப் பிரதிபலித்துள்ளார். ஜனாதிபதியினால் பகிரங்கமாக வெளியிடப்பட்ட மிகமோசமானதும், ஆபத்தானதுமான இக்கருத்து ஆட்சிநிர்வாகம் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விதமாக அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்ட கட்டமைப்பை வலுவிழக்கச்செய்கின்றது.

அரசியலமைப்புப்பேரவையானது கடந்த 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்டது. பின்னர் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் ஊடாக அப்பேரவை மீள ஸ்தாபிக்கப்பட்டது. அதேவேளை நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கான 18 ஆம் மற்றும் 20 ஆம் திருத்தங்களின்கீழ் அரசியலமைப்புப்பேரவை நீக்கப்பட்டது.

மீண்டும் அப்பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையகாலங்களில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உரிய எல்லைக்கோட்டைக் கடந்துள்ளன. குறிப்பாக உயர்நீதிமன்ற நீதியரசராக தான் பரிந்துரைந்த பெயரை ஏற்றுக்கொள்ளாமை மற்றும் தற்போதைய பொலிஸ்மா அதிபரை மீண்டும் அப்பதவிக்கு நியமிக்குமாறு முன்வைத்த தொடர் கோரிக்கையை ஏற்காமை என்பவற்றுக்காக அரசியலமைப்புப்பேரவை மீது ஜனாதிபதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகின்றார். இந்த மீள்நியமனம் குறித்த கோரிக்கையை நிராகரிப்பதன் மூலம் அரசியலமைப்புப்பேரவை அதன் கடப்பாட்டை உரியவாறு நிறைவேற்றுகின்றது. இருப்பினும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு இணங்காததன் விளைவாக பொலிஸ் திணைக்களம் செயற்படமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்புப்பேரவையினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருப்பதானது, ஜனாதிபதியின் பரிந்துரைகளை ஏற்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு அரசியலமைப்பின் ஊடாக ஆணை வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஒரேயொரு நபரின் பெயரை மாத்திரம் பரிந்துரைத்து, அப்பெயர் அரசியலமைப்புப்பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், ஜனாதிபதி அப்பதவிக்குப் பொருத்தமான வேறு நபர்களின் பெயர்களை முன்மொழியவேண்டும். அதனைவிடுத்து தான் முன்மொழிகின்ற ஒரேயொரு நபரின் பெயரை அரசியலமைப்புப்பேரவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிடின் அரசியலமைப்புப்பேரவை உறுப்பினர்களை அச்சுறுத்துவதோ ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும்.

மக்களின் ஆணையின்றி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவரின் எதேச்சதிகாரப்போக்கு படிப்படியாக மேலோங்கிவருவதை எம்மால் அவதானிக்கமுடிகின்றது. அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள மக்களின் இறையாண்மையை எவ்விதத்திலும் புறக்கணிக்கமுடியாது. ஜனாதிபதியின் இந்த எதேச்சதிகாரப்போக்கு தொடருமாக இருந்தால், அது மீண்டுமொரு அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கும், பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்குமே வழிவகுக்கும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.