காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடிய சட்டங்கள், கொள்கைகள் விரைவில் – கெஹலிய

33 0

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் வகையில் பலமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு , வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களிலும்  ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசு மற்றும் சுற்றாடல் அழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளை தடுப்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்கொள்ள நேரும் பாதிப்புகளை முடிந்தளவு கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவரும் அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுடன் அதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

காலநிலை மாற்றம் காரணமாக கடந்த காலங்களில் நாம் எதிர்நோக்க நேர்ந்துள்ள பாதிப்புகளை மிக எளிதாக கணித்து விட முடியாது.

அதேவேளை கணக்கெடுக்காமல் விடவும் முடியாது. அதனால் எமது பொருளாதாரம், விவசாய பயிர்செய்கைகள் பாதிப்பு , மக்கள் பாதிப்பு உணவு பாதுகாப்பு என்பவை கவனத்தில் கொள்ளப்பட்டு  அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டில் மட்டுமின்றி எமது பிராந்திய நாடுகளிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.

அதனைக் கருத்திற்கொண்டு  கால நிலை ஆய்வு சம்பந்தமான பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானமொன்றை மேற்கொண்டிருக்கிறார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் பிராந்திய நாடுகள் மட்டுமின்றி முழு உலகிற்கும் காலநிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அறிவைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

அத்துடன் காலநிலை மாற்றங்களால் தற்போது நாடு எதிர்கொள்ளும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் பலமான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் அவசியமாகின்றன.

அதனை தயாரிக்கும் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை தற்போது எமது அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இந்த வருட இறுதிக்குள் அந்த புதிய கொள்கைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.