கிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை

264 0

கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் வலுப்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்களினால் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இவ் வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்று இருமாதங்கள் கடந்த நிலையிலும் கிளிநொச்சி வலயத்திற்கான நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியலே காணப்படுகின்றது.

போரினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பெரும் பின்னடைவினை கல்வியில் எதிர்கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெறவுள்ளார் என்ற விடயம் வடமாகாண கல்வி அமைச்சிற்கு நன்கு தெரியும். ஆனால் உடனடியாக ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமித்து இருக்க வேண்டும். அதனை வடமாகாண கல்வி அமைச்சு செய்யவில்லை. தங்களுடைய நிர்வாகத்திற்கென வாகனங்கள் இல்லை என புலம்புகின்ற வடமாகாண கல்வி அமைச்சு 32,000 மாணவர்களைக் கொண்ட கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளரை நியமிக்காததன் பின்னணியில் அரசியலே உள்ளது. என கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்களினால் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது   கிளிநொச்சி வலயத்தில் கல்வி முகாமைத்துவம், கல்வி அபிவிருத்தி என்பவற்றிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் இல்லை.

கிளிநொச்சி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவரே தற்போது வடமாகாண கல்வி அமைச்சராக உள்ளார். கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராகவும் பின்பு மேலதிக கல்விப் பணிப்பாளர் இருந்தவரும் தற்போது வடமாகாண சபையின் உறுப்பினராக இருக்கினறார் இந்த நிலையில் கிளிநொச்சி வலயத்தின் நெருக்கடி நிலைமையினை நன்கு அறிந்த இவர்கள்; அரசியல் குறுக்கீடுகளை களைந்து விரைவில் கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளிநொச்சியில் இருந்து ஒரு வடமாகாண கல்வி அமைச்சரையும் ஒரு வடமாகாண சபை உறுப்பினரையும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தெரிவு செய்த நிலையில் கிளிநொச்சி வலயத்திற்கான அரசியல் தலையீடுகள் உட்பட சகல தடைகளையும் தகர்த்து எறிந்து நிரந்தரக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க இருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்காமல் வலயம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை இலங்கை ஆசிரியர் சங்கம் கவனத்தில் எடுத்து நிரந்தரக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும். கிளிநொச்சி வலயத்திலே நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் இல்லாததன் காரணமாக அதிபர்கள். ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே பின் தங்கிய நிலையில் இருக்கின்ற கிளிநொச்சியின் கல்வி இவ்வாறான நடவடிக்கைகளால் மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலையே ஏற்படும் எனவும் கல்விச் சமூகம் கவலை தெரிவித்துள்ளது.