33 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனர்கள் விடுதலை: இஸ்ரேல் தகவல்

44 0

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 33 குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தனர். இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர். சாலைகளில் கூடிய ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 39 பேர் விடுவிக்கப்பட்ட அதே நாளில் 17 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனம் (The Palestinian Prisoners’ Club advocacy group) தெரிவித்துள்ளது.

முன்னதாக போர் நிறுத்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 24 பெண்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது. இதற்கு ஈடாக 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த 24 பேரில் 13 இஸ்ரேலியர்கள் தவிர தாய்லாந்தை சேர்ந்த 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கத்தார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.