2022ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னதாக பிரதமராக பதவியேற்கும் எண்ணம் எனக்கு இருந்திருக்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் பொய்யுரைக்கின்றார் என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் மின்சக்தி, வலுச்சக்தி செலவுத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தின்போது சுமந்திரன். எம்.பி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த விசேட கூற்று தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2022ஆம் ஆண்டு அரகல புரட்சி ஏற்பட்டபோது, சுமூகமான அதிகாரமாற்றத்துக்காக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிவுகள் அடங்கிய வரைவொன்றைத் தயாரித்தது.
இந்த வரைவினை நாம் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் வழங்கினோம். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வழங்கினோம்.
கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தமையால் எமது சங்கத்தின் குழுவினர் நேரடியாகச் சென்று அவரிடத்தில் அந்த முன்மொழிவுகளை கையளித்திருந்தோம்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் எமது சங்கத்தினைச் சந்தித்து உரையாட வேண்டுமெனக் கோரினார்கள்.
அதற்கு அமைவாகவே அக்கட்சிகளை எமது தலைமையகத்திற்கு அழைத்து உரையாடினோம். இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் எந்தவொரு தரப்பினரையும் அழைத்திருக்கவில்லை.
2022ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னதாக பிரதமராக பதவியேற்கும் எண்ணம் எனக்கு காணப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றமையானது பொய்யானதாகும்.
இதுவே உண்மையான நிலைமைகளாக இருக்கத்தக்கதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துரதிஷ்டவசமாக பாராளுமன்ற சிறப்புரிமை என்ற பெயரில் என்னால் பதில் வழங்க முடியாத இடத்தில் பொய்களைக் கூறுகின்றார்.
குறிப்பாக 2022ஆம் ஆண்டு மே இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனிநபர்களை பற்றிய முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை. அவை செயற்குழுவில் ஆராயப்பட்டு சட்ட சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
குறித்த முன்மொழிவுகளை இலங்கையின் அரசியல், நிர்வாக நெருக்கடிக்கான தீர்வினையும் கருத்திற்கொண்டே இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப்போன்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட இலட்சியங்களை நாட்டின் நலன்களின் மேலாக வைத்து செயற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தனிப்பட்ட இலாபம், அல்லது பதவி பேராசைக்காக எனது கொள்கைகளை நான் ஒருபோதும் தியாகம் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.
அதுமட்டுமன்றி, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதம் ஒன்றின் நேரத்தினை வீணடித்தமையை இட்டும் நான் கவலை கொள்கின்றேன் என்றார்.

