போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் கைது

60 0

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு உதவியமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணத்துடன் சந்தேக நபர்களான தாயும், மகனும் நேற்று முன்தினம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பணக்கொடுக்கல் வாங்கல்கள் உட்பட வெவ்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய அவரது வீட்டில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 11 இலட்சத்து 12 ஆயிரத்து 900 ரூபா பணமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி கணக்கிலத்துக்கு கோடிகணக்கில் பணம் வைப்பு செய்யப்படுவதாகவும் அந்த பணம் உடனடியாக ஏ.ரி.எம். இயந்திரத்தை பயன்படுத்தி மீள பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த வங்கி கணக்கிலக்கம் போலியான தகவல்களை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.