சித்திரவதையால் உயிரிழந்த அலெக்ஸ் குறித்து விசாரணை : யாழ். நீதிமன்றத்தைச் சூழ பெருமளவான பொலிசார் குவிப்பு

65 0

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது , நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்று இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில் , சிறைச்சாலை அத்த்தியட்சகர் , சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரி , உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.