வடக்கு, கிழக்கில் தமிழர் இருப்பை அழிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

153 0

தமிழ் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சாக பாதுகாப்பு  அமைச்சு உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் அடையாளங்களை இல்லாதொழிக்கவும்  பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை, அதனை செய்தது இலங்கையின் முப்படை என்றே நாங்கள் அன்று முதல் இன்று வரை கூறி வருகிறோம்.

இலங்கையில் இன்று யுத்தமில்லை ஆயுத முரண்பாடுகள்  ஏதும்  இல்லை. எனினும் இலங்கை இன ரீதியில் பிளவுப்பட்டே உள்ளது.காலம் காலமாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

பொருளாதார கடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெருமளவான நிதியை பாதுகாப்புக்கு செலவழிக்க கூடாது. புலிகள் இருந்த காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று கூறி நிதிகளை செலவிட்டீர்கள். ஆனால் இன்று எதற்காக செலவிடுகின்றீர்கள். தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்க அதனை வழங்க நீங்கள் தயாரில்லை.

தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதை உங்களினதும் உங்களின் படைகளினதும் நோக்கம் அதனை முன்னெடுக்கவே இனவாத முரண்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள். அதற்காகவே பாதுகாப்பு என்ற பெயரில் படைகளுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு  ஒதுக்கப்படும் சம்பளத்தில் 48 சதவீதம் படைகளுக்கே வழங்கப்படுகிறது. கல்வி அமைச்சினால் முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மாத சம்பளமாக 6 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும் நிலையில் வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாக பணி புரியும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு மாதாந்த சம்பளமாக 30 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.இது எந்த வகையில் நியாயம்.

தமிழ் மக்களின் வர்த்தகம்,விவசாயம் என்பன இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முடியாத நிலையில் கடற்படை உள்ளது.

பொலிஸார்  தெற்கில், ஒரு நிலைப்பாட்டையும் வடக்கில் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கிறார்கள். இவ்வாறான நிலையில் நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்.

தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வெறுக்கத்தக்க அமைச்சாக பாதுகாப்பு அமைச்சே உள்ளது. யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகுகின்ற போதும் உங்கள் நடவடிக்கைகளில் நீங்கள் எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. இவ்வாறான நிலை இருக்கும் வரை நாட்டில் இனப்பிரச்சினையும் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.