முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
நேற்று மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

இதனுடன் துப்பாக்கி குண்டு சன்னங்கள் மற்றும் குண்டு சிதறல்கள் இலக்கத் தகடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதுவரையில் மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

நான்காவது நாளான நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

24 அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.


