டயனா கமகே – ரோஹன பண்டார, சுஜீவ பெரேரா மோதல் : விசாரணைக்குழு அறிக்கை ஒழுக்கவியல் குழுவிடம் கையளிப்பு

223 0
பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே – ரோஹன பண்டார, சுஜீவ பெரேரா ஆகியோருக்கிடையிலான மோதல் தொடர்பான விசாரணை குழு அறிக்கை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷவினால் செவ்வாய்க்கிழமை (14)  சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  டயானா கமகே,  ரோஹன பண்டார,  மற்றும்  சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப் பாராளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்காகப் பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார்.

இதற்கமைய இந்தக் குழுவின் உறுப்பினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ,  ரமேஷ் பத்திரன,  கயந்த கருணாதிலக மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்,  தலதா அத்துகோரள மற்றும் இராஜாங்க அமைச்சர்  சீதா அரம்பேபொல ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் குழு நான்கு தடவைகள் கூடியிருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிஷாந்தவும் சாட்சியங்களைப் பெறுவதற்கு குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே – ரோஹன பண்டார, சுஜீவ பெரேரா ஆகியோருக்கிடையிலான மோதல் தொடர்பான விசாரணை குழு அறிக்கை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.