விமல் வீரவன்சவின் இரத்த பரிசோதனை குறித்து விசாரணை!

367 0

விமல் வீரவன்சவின் இரத்த மாதிரி தனியார் ஆய்வு கூடமொன்றில் பரிசோதிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தமக்கு பிணை வழங்கப்பட வேண்டுமெனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தப் போராட்டம் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட விமல் வீரவன்ச, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் விமல் வீரவன்சவின் இரத்த மாதிரி தனியார் மருத்துவ ஆய்வு கூடமொன்றில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த இரத்த மாதிரியை சிறைச்சாலைக்கு வெளியே எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை ஆணையாளர் நிசான் தனசிங்கவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் எந்தவொரு கைதியினதும் இரத்த மாதிரி சிறைச்சாலை ஆய்வு கூடத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்துவது வழமையானது.

பரிசோதனை நடத்த முடியாத நிலையில் அது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்து அனுமதி பெற்றுக் கொண்டே பரிசோதனைகள் தனியார் வைத்தியசாலைகள் ஆய்வு கூடங்களில் பரிசோதனை செய்யப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தினால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச தற்போது தேறி வருவதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.