நீதித்துறை மீதான உறுப்பினர்களின் கருத்துக்காக கவலை வெளியிட்டுள்ளேன்

77 0

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தமக்கு காணப்படும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி நீதிபதிகள், சட்டத்தரணிகள் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கரிசனைகளை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் அனுப்பி வைத்துள்ள எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதம் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எனக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டாலும் அது தற்போது வரையில் எனக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் அதில் உள்ள விடயங்கள் பற்றிய கவனம் செலுத்துவேன்.

முன்னதாக, அச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் என்னை நேரில் வந்து சந்தித்திருந்தனர். அச்சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி நீதிபதிகள், சட்டத்தரணிகள் சம்பந்தமாக தெரிவிக்கும் கருத்துக்கள் சம்பந்தமாக எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

விசேடமாக, உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைகள் காணப்பட்டாலும், அவர் வெளியிடும் கருத்துக்களால் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையீனம் சிதைக்கப்படுவதாக கூறியிருந்தார்கள். அந்த விடயத்தனை நான் மிகவும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

இந்நிலையில் தான் கடந்த அமர்வில் போது உறுப்பினர்களால் சபையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் பகிரங்கமாக கவலையை வெளிப்படுத்தினேன். குறித்த தருணத்தில் நான் சபையை வழிநடத்தியிருக்காதபோதும், பின்னர் விடயத்தை அறிந்து உடனடியாக பிரதிபலித்தேன் என்றார்.