யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு.

1183 0

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான பயிலரங்கு சிறப்புற நடைபெற்றது. இப்பயிலரங்குகளில் கிட்டத்தட்ட 200ஆசிரியர்கள் இணைந்து கொண்டனர். அதிலும் இளைய ஆசிரியர்களின் இணைவு மிகச் சிறப்பாக இருந்தது. தமிழாலயங்களின் தொடக்க காலத்தில் ஆசிரியப் பணியில் இணைந்த பல ஆசிரியர்களின் வயது முதிர்வின் கரணியத்தினால், அவர்கள் வரும் காலங்களில் ஓய்வுநிலையை அடைய வேண்டியுள்ளது. அவர்களின் இடைவெளியை நிரப்பும் இலக்கு நோக்கிய நகர்வினால், தமிழாலயங்களில் ஆண்டு 12வரை தமிழ்பயின்ற மாணவர்கள் ஆசிரியர்களாக இணைக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்துவதனூடாகத் தரம்மிக்க ஆசிரியர்களாக உருவாக்கப்படுகின்றார்கள்.

இக்கற்பித்தற் பயிற்சிகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மூத்த ஆசிரியர்களும் கல்விப்பிரிவின் ஆசிரியப் பயிற்றுநர்களுமாகிய திருமதி காந்தரூபி சந்திரகுமாரன், திருமதி கொன்ஸி மரியதாஸ், திருமதி யமுனாராணி தியாபரன், திருமதி ஞானச்செல்வி திருபாலசிங்கம் ஆகியோர் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். இப்பயிலரங்குகளின் பிற்பகுதியில் தமிழ்த்திறன், தேர்வு, நிர்வாக ஒழுங்குகள் போன்றவற்றின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள், அப்பிரிவுகளின் பொறுப்பாளர்களினால் பயிற்றப்பட்டது. தொடர்ந்து 18.11.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ள தென், தென்மேற்கு மாநிலங்களுக்கான பயிலரங்கு, இறுதியாக வடமாநிலத்தில் நிறைவுபெறும். நாடுமுழுவதிலுமுள்ள தமிழாலயங்களில் கற்பிக்கும் 1000க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 400க்கு மேற்பட்டவர்கள் இப்பயிலரங்குகளினால் வளம்பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.