கிரெடிட் கார்டு மோசடி: அமெரிக்காவாழ் இந்தியர்கள் இருவருக்கு சிறை

246 0

போலியான பெயர் மற்றும் முகவரிகளை வைத்து ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டுகளை வாங்கி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த அமெரிக்காவாழ் இந்தியர்கள் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை சேர்ந்த விஜய் வர்மா(49) மற்றும் தர்சேம் லால்(78) ஆகியோர் அங்கு நகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகும் ஆசையில் சுமார் 7 ஆயிரம் போலியான பெயர்கள் மற்றும் முகவரிகளை உருவாக்கிய இவர்கள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான  கிரெடிட் கார்டுகளை பெற்றுள்ளனர்.

பின்னர், அந்த கார்டுகளின் மூலம் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் போன்றவற்றை கடனாக வாங்கிவிட்டு தவணை தொகையை ஒழுங்காக திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர். மேற்கண்ட மோசடியில் தொடர்புடைய பெரிய தொகை விஜய் சர்மாவுக்கு சொந்தமான நகை கடையில் நகைகள் வாங்கியதுபோல் கணக்கு காட்டப்பட்டது.

இதையடுத்து, விசாரணையில் இறங்கிய அமெரிக்க குற்றப்பிரிவு புலனாய்வு துறையினர் விஜய் சர்மா மற்றும் அவரது கூட்டாளி தர்சேம் லால் செய்துவந்த மிகப்பெரிய மோசடியை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் நியூ ஜெர்சி மாநில குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த மோசடியின் மீது அமெரிக்காவில் உள்ள சிறிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுமார் 20 கோடி டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவருக்கும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் ஓராண்டு காலத்துக்கு அவர்களை வீட்டுக் காவலில் வைக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்த பின்னர் இருவரையும் தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை கண்காணிப்பில் வைக்கும்படியும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.