பல வருடங்களின் பின்னர் கொழும்பு, காக்கைதீவு கால்வாய் புனரமைப்பு !

160 0

கொழும்பு – 15, மட்டக்குளி – காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள கால்வாய் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், முதற்கட்டமாக 80 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

காக்கைதீவு பகுதியில் 20 வருடங்களுக்கு மேலாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்த கால்வாயின் புனரமைப்பு பணிகள் கொழும்பு மாநகர சபையின் 23 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது இந்தக் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டுள்ளதால் நீரோட்டம் சுமுகமாக இடம்பெறுகிறது.

குறித்த பகுதி களனி ஆறு கடலுடன் கலக்கும் பகுதியுடன் இணைந்துள்ளதால் கால்வாயில் உள்ள நீர் கடலுடன் கலக்கிறது.

காக்கைதீவு பகுதியிலுள்ள கால்வாய், அங்குள்ள சதுப்பு நில வனப்பகுதியை ஊடறுத்துச் செல்வதால், அப்பகுதி அங்கு வாழும் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்களுக்கு சிறந்ததாக காணப்படுகிறது.

இந்த கால்வாய் புனரமைப்பின் பின்னர், காக்கைதீவு கடற்கரைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைவதுடன், அங்கே நுளம்புப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும். சதுப்புநில வனப்பகுதியை பாதுகாக்கவும் முடியும்.

குறித்த வனப்பகுதியில் சுமார் 20க்கு மேற்பட்ட முதலைகள், வெளிநாட்டுப் பறவைகள், சதுப்பு நிலத்தில் உயிர் வாழக்கூடிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரன் சிதம்பரம் தெரிவிக்கையில்,

“காக்கைதீவு பகுதியை ஜனாதிபதியின் தூரநோக்கிற்கு அமைய, அதனை அழகுபடுத்தி, சுற்றுலாப் பிரதேசமாக மாற்றும் நோக்கில் இந்த கால்வாய் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை 23 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. அதேபோன்று கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கும் காக்கைதீவு கடற்கரையோர பூங்கா சங்கத்தினருக்கும் நன்றி கூறுகின்றேன்.

கொழும்பு வடக்குப் பகுதியை குறிப்பாக, காக்கைதீவை நுளம்புகள் அற்ற பகுதியாக எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கிலேயே கால்வாயை சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள வனப்பகுதியை நாம் பாதுகாக்க வேண்டும். இங்கு மயில்கள், பருந்துகள், வெளிநாட்டுப் பறவைகள், முதலைகள் போன்ற பல உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன. சுற்றுச்சுழலை பாதுகாக்கும் நோக்கிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கிலும் நாம் புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். இவற்றுக்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு எதிர்காலத்தில் அவசியம் என்றார்.