காசா மருத்துவமனை பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்: நோயாளிகள் பலர் தவிப்பதாக ஐ.நா தகவல்

155 0

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இஸ்ரேல் ராணுவம், காசாவின் அல்-குத்ஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளை குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதோடு அல்-குத்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு, அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்,

ஆனால், நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளதால், அவர்களை நகர்த்தக் கூட முடியாது சூழல் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் அப்பகுதியில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 14,000 பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் அதன் மைதானத்தில் தஞ்சமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள யாட்டா நகரின் நுழைவாயிலில் 23 வயது பாலஸ்தீனியர் ஒருவர், இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில் நகரத்தில் இன்று 93 பேர் பலியாகியுள்ளனர். அக்டோபர் 7 முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8,306 பேர் கொல்லப்பட்டனர். அதில் 3,457 குழந்தைகள், 2,136 பெண்கள் மற்றும் 480 முதியவர்கள் அடங்குவார்கள். மேலும், 21,048 பேர் காயமடைந்துள்ளனர். 1,050 குழந்தைகள் உட்பட 1,950 பேரை காணவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் தோல் நோய்கள் பரவலாக காணப்படுகிறது. “எங்கள் மக்கள் மீதான போரை நிறுத்துங்கள்” என்று பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே தெரிவித்திருக்கிறார். முன்னதாக, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.