சீன கப்பல் கடலுக்கடியில் ஆராய்ச்சிகளில் ஈடுபட அனுமதியில்லை – நாரா

146 0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் கடலுக்கடியில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் சி யாங் 6 கப்பலுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்காக வெளிவிவகார அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கும் நாரா அமைப்பு இந்திய பெருங்கடலில் நீர்நிலையை மையமாக கொண்டு வான் கடல் ஆராய்ச்சிக்கு இணங்கியுள்ளதாக நாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து காணப்படும் உணர்வுகள் காரணமாக கடலுக்கு அடியில் ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை எனவும் நாரா அமைப்பின் விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.

கடலில் வெப்பநிலையும் குளிர்ச்சியும் காலநிலையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை கண்டறிவதற்காகவே இவ்வாறான ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள நாரா அமைப்பின் தலைமை விஞ்ஞானி அருளானந்தன் இதன் மூலம் எதிர்காலத்தில் வரட்சி மற்றும் மழை குறித்து ஒரு மாதத்திற்கு முன்னதாகவே  அறியமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது எங்கள் விவசாயதுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்துள்ள அவர் விவசாயிகள் காலநிலை குறித்து முன்கூட்டியே அறியமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உலகில் குறைந்தளவு ஆராயப்பட்ட பகுதி இந்துசமுத்திரம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்,இதன் காரணமாக எங்கள் விஞ்ஞானிகள் கப்பலில் ஏறி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எவரும் தரவுகளை எடுத்துக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை நாங்களே அதனை வைத்துக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கடலுக்குஅடியில் எந்த ஆராய்ச்சிக்கும் அனுமதியளிக்கப்போவதில்லை என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

உதாரணமாக கனிமங்கள் மற்றும் எரிவாயுகளை கண்டறிய இத்தகைய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன – இந்த விடயத்தில் பாதுகாப்பு கரிசனைகள் உள்ளதால் நாங்கள் இதற்கு அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.