நீர் கட்டணத்துக்கும் விலை சூத்திரம் 2024 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும்

151 0

நீர் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினால் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2024 ஜனவரி முதல் அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை அனுமதியுடன் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதன் போது மிகவும் பாதிக்கப்படக் கூடிய சமூகத்தினருக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை.

வறுமையான மக்கள் மத்தியில் எனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவே நான் இவ்வாறு செயற்பட்டதாக சிலர் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

ஆனால் நீர் வழங்கல் என்பது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையின் கீழ் உள்ளடங்குகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதில் பெருந்தோட்ட மக்கள் உள்ளடங்கவில்லை.

ஆகஸ்டில் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.

2024 ஜனவரியில் நீர் கட்டண திருத்தம் தொடர்பில் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபையினால் இந்த சூத்திரத்துக்கான முதலாவது வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய தரப்பினரது ஆலோசனைப் பெற்று இந்த விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நுகர்வோருக்கு நிலையான மற்றும் நியாயமான கட்டணத்தில் நீரை விநியோகிப்பதற்காக பொது ஆலோசனைகள் மற்றும் கணிப்புகளை தொடங்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். வேறு எந்த வகையிலும் மீண்டும் நீர் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என்றார்.