சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட இணக்கப்பாடு உள்ளடங்கலாக அரசாங்கத்தின் தற்போதைய அடைவுகளைப் பாராட்டும் அதேவேளை, நிலையான பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கை தொடர்பான முதலாம் கட்ட மதிப்பீட்டுக்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதனூடாக அச்செயற்திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து வாழ்த்துத்தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனம், ‘இந்த அடைவுகளைப் பாராட்டும் அதேவேளை, நிலையான பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அவ்வாறே பேணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஆட்சியியல் குறைபாடுகள் மற்றும் ஊழல் மோசடிகளுக்கான சாத்தியப்பாடுகள் போன்றவற்றை சீரமைப்பது இன்றியமையாதது எனவும், இவ்விடயங்களில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியியல் ஆய்வு அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைப்பிரஜைகள் அனைவரும் மறுசீரமைப்பு செயற்திட்டங்களில் முனைப்புடன் பங்கேற்கவேண்டும். நாடு முகங்கொடுத்திருக்கும் நிதியியல் சவாலில் இருந்து மீட்சியடைவதற்கும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கும் கூட்டிணைந்த நடவடிக்கை இன்றியமையாததாகும்’ எனறும் வர்த்தக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தற்போதைய மறுசீரமைப்புக்கள், சிறந்த ஆட்சியியல் நிர்வாகம் மற்றும் கூட்டிணைந்த பொறுப்புணர்வின் மூலம் நாட்டை மீண்டும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் கொண்டுசெல்லமுடியும் எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

