ஹப்புத்தளை – பெரகல பிரதான வீதியில் மண்மேடு சரிவு : வீதியை ஊடறுத்து பாய்ந்த வௌ்ள நீர் !

139 0

ஹப்புத்தளை – பெரகல பிரதான வீதியின் விகாரகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதுடன் குறித்த வீதியை ஊடறுத்து பாய்ந்த வெள்ள நீரால் அங்கு அச்சநிலை ஏற்பட்டது.

நேற்று பிற்பகல் நிலவிய மழை காரணமாக வீதி வௌ்ளத்தில் மூழ்கியது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஹல்துமுல்லை பொலிஸார், பிரதேச மக்கள் இணைந்து மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பண்டாரவளை, எல்ல பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதேவேளை, பதுளுஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தெமோதர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

மழையினால் ஹாலிஎல  – உடுவர பகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு செல்லும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மகாவலி கங்கையின் ஆற்றுப்படுக்கையில் இன்று காலை முதல் பெய்து வருகின்ற மழையினால் பொல்கொல்ல மகாவலி அணையின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.