புத்தளம் – நாத்தாண்டிய பிரதேச பாடசாலை ஒன்றில் புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த இரு மாணவர்களை அதிபர் விசாரித்து கண்டித்ததை தொடர்ந்து குறித்த இரு மாணவர்களும் காணாமல்போன நிலையில் அவர்களை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (20) மீட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன மாணவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் காணாமல்போனதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் வியாழக்கிழமை (19) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து மாரவில தலைமையக பொலிஸாரால் மாணவர்கள் இருவரும் புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

