ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு போக விவசாயிகள், இரு போக விவசாயிகள் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் கூச்சல் ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கள்ளந்திரி , புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் மனுக்கள் மற்றும் கடிதங்களுக்கு வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை , பொதுப்பணித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பதில் அளித்தனர்.
கூட்டத்தில் வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தபோது தங்களுக்கு கடன் அட்டை கிடைப்பதில்லை எனவும், மதுரை மாவட்டத்தில் பாதி விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் கிடைப்பதில்லை எனவும், கடன் அட்டை முகாம்கள் குறித்து யாருக்கும் தெரியவில்லை என குற்றம்சாட்டினர். தொடர்ந்து பேசிய ஆட்சியர் சங்கீதா, “முதலில் இரு போக விவசாயிகளுக்கு 20 நாட்கள் தண்ணீர் திறப்போம். அதன்பிறகு பருவமழையை பொறுத்து ஒரு போக விவசாயிகளுக்கும் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்வோம். இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்தால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்” என்றார்.
அதற்கு விவசாயிகள் ஒரு போகம், இரு போகம் விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்து ஆட்சியர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஆட்சியர் சங்கீதா, நவம்பர் மாதம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றார். அதற்கு விவசாயிகள், தண்ணீர் திறந்துவிடாவிட்டால் விவசாயம் செய்யாமல் நாங்கள் பிச்சைதான் எடுக்க வேண்டிய வரும் என்றனர். தொடர்ந்து பேசிய விவசாயிகள், “மானாவாரி பயிர்களை தேக்கிவைக்க அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டி அரசுக்கு ஆட்சித்தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் தனியார் மூலமாக குளிர்பதன கிடங்கு அமைப்பது என்பது சிரமம்’’ என்றனர்.
செய்தியாளர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படுமா?: பழைய ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடக்கும்போது செய்தியாளர்கள் அமருவதற்கு 10க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருக்கும். ஆனால், புதிய ஆட்சியர் அலுவலகம் திறந்ததில் இருந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாியகள் பேசும் விரவங்களை சேகரித்து செய்தி வெளியிட வரும் செய்தியாளர்கள் அமருவதற்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. அதனால், செய்தியாளர்கள் நின்று கொண்டே செய்தி சேகரிக்கும்நிலை நீடிக்கிறது. ஆட்சியர் சொல்லி இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா? அல்லது அதிகாரிகள் ஆட்சியர் கவனத்திற்கு தெரியாமலே செய்தியாளர்கள் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்களா? என்பது தெரியவில்லை. ஆட்சியர் சங்கீதா, இந்த விஷயத்தில் தலையீட்டு அடுத்தக் கூட்டத்தில் இருந்து செய்தியாளர்கள் அமருவதற்கு இருக்கைகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

