மதுரை மாநகராட்சியின் மிக இளம் வயது ஆணையாளர்

143 0

மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே மிக இளம் வயது ஆணையாளராக 28 வயது லி.மதுபாலன் பொறுப்பேற்றுள்ளதால், அவர் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆரம்ப காலத்தில் நகராட்சியாக செயல்பட்டது. நகராட்சியாக செயல்பட்ட மதுரையின் முதல் மாநகராட்சி ஆணையாளராக 1933-ம் ஆண்டு எஸ்.சாமுவேல் பிள்ளை இருந்துள்ளார். அவருக்கு பிறகு 1971-ம் ஆண்டு வரை மொத்தம் 17 பேர் மதுரை நகராட்சியின் ஆணையாளராக இருந்துள்ளனர். அதன்பிறகு 1971-ம் ஆண்டு வெ.லெட்சுமிரதன் மதுரை மாநகராட்சியின் முதல் ஆணையாளராக இருந்துள்ளார். அவருக்குப் பிறகு இதுவரை தற்போது மாறுதலாகி சென்ற பிரவீன்குமார் வரை, 28 பேர் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்றியுள்ளனர்.

புதிய மதுரை மாநகராட்சி ஆணையாளரக லி.மதுபாலன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இவருக்கு வயது 28. இந்த இளம் வயதில் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக இவர் பொறுப்பேற்றுள்ளது, அவர் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு இளம் வயதில் மதுரை மாநகராட்சிக்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டதில்லை என்று மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவருக்கு முன் இருந்த சந்திப் நத்தூரி 31 வயதில்தான் மதுரை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார். அவர், பல்வேறு சீர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிறப்பாக செயல்பட்டதால் மக்களுடைய பாராட்டைப் பெற்றார். தற்போது அவரை விட மிக இளம்வயது ஆணையாளர் மதுரைக்கு கிடைத்துள்ளதால் அவர் தன்னுடைய சிறப்பான நடவடிக்கையால் மதுரையின் முகத்தை மாற்றுவார் என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.