சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயான கமகே தன் மீது சபைக்கு வெளியே வைத்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜித் பெரேரா தாக்கியதாக சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய நிலையில், டயனா கமகேயினால் சுஜித் பெரேரா எம்.பி.யே தாக்கப்பட்டதாக கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்தனர்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் மற்றும் .பூகோள பாதிப்பு தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது மாலை 3.55 மணியளவில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயான கமகே திடீரென சபைக்குள் வந்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
அதில் இராஜாங்க அமைச்சரான நான் சபைக்கு வெளியில் நின்றபோது அங்குவந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சுஜித் பெரேரா என்னுடன் தர்க்கப்பட்டு என்னைத் தாக்கினார். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் பெண்களை துஷ,பிரயோகம் செய்வதில்தான் ஆர்வமாக உள்ளார்கள். இந்த சுஜித் பெரேரா எம்.பி. வீட்டில் தனது மனைவியை தாக்குவது போலவே ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரான என்னையும் தாக்கினார்.
இவ்விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பேன். அதுமட்டுமன்றி நான் வீதியில் இறங்கிப் போராடவுள்ளேன். எனவே என்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதனையடுத்த்து எழுந்த பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்விடயம் பாரதூரமானது. எனவே உடனடியாக சபையை 10 நிமிடங்கள் இடைநிறுத்தி சபாநாயகர் அலுவலகத்தில் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதனையடுத்த்து சபைக்கு தலைமைதாங்கிய நிமல் பியதிஸ்ஸ எம்.பி. சபை நடவடிக்கையை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக 4 மணியளவில் அறிவித்தார். இதன்பின்னர் சபை மீண்டும் 4.15 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடியது.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தன்னை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சுஜித் பெரேரா தாக்கியதாக இங்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயான கமகே ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.சபையும் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாம் சபாநாயகரை சந்தித்து டயனா கமகே எம்.பி. மோசமான வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு கைப்பையால் சுஜித் பெரேரா எம்.பி.யைத் தாக்கும் வீடியோ ஆதாரத்தை சபாநாயகரிடம் கையளித்தோம். எனவே இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதனையடுத்த்து சுஜித் பெரேரா எம்.பி. எழுந்து ,,சபைக்கு வெளியில் மின் தூக்கியருகில் ரோஹன பண்டார எம்.பி.யுடன் டயனா கமகே தூஷண வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு தர்க்கப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் எனக்கூறியபோது என்னையும் தூஷண வார்த்தைகளினால் திட்டியவாறு தாக்கினார். அவரின் தாக்குதலை தடுக்கும் முயற்சியிலேயே நான் ஈடுபட்டேன். எனவே நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த ஐக்கியமக்கள் சக்தி எம்.பி.யான ரோஹன பண்டார , டயனா கமகே எம்.பி. என்னுடன் தூஷண வார்த்தைகளைப் பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டார். எனது காற்சட்டையை கழற்றுவேன் என்றார். எல்லோரும் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவே கூறுகின்றனர் .ஆனால் டயான கமகே எம்.பி.யினால் ஆண் எம்.பி.க்கள் துன்புறுத்தப்படுகின்றனர். எமக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இந்த பெண் எம்.பி.யிடமிருந்து ஆண் எம்.பி.க்களின் உரிமைகளை சபாநாயகர் பாதுகாக்க வேண்டும். கழிவு பௌசர்கள் எம்மை மோதுகின்றன என்றார்.
இதனையடுத்த்து ஆவேசமாக எழுந்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் கன்னத்தில் அறை வேன்.இந்த எம்.பி.க்களை கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும். ஆனால் அறைய முடியவில்லை. என்னை கழிவு பௌசர் என்று கூறும் எம்.பி. யின் அம்மா, மனைவி, சகோதரிகள்தான் கழிவு பௌசர்கள் என்று கூச்சலிட்டபோது பிரதி சபாநாயகர் அவரின் பேச்சை நிறுத்தி இது தொடர்பில் சபாநாயகர் முறையான விசாரணை நடத்துவார் என்றார்.
இதன்பின்னர் சபாபீடத்துக்கு வந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,மற்றும் சுஜித் பெரேரா ,ரோஹண பண்டார எம்.பி.க்கள் முனவைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தமைமையில் சமல் ராஜபக்ச,ரமேஷ் பத்திரண ,கயந்த கருணாதிலக , இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியவர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி தீர்ப்பை அறிவிப்பார்கள் என்றார்.

