மட்டக்களப்பு மயிலத்தமடு சிங்கள கிராமத்தில் கை வைத்தால் கலவரம் வெடிக்கும் – வீரசேகர

245 0

மட்டக்களப்பு திம்புலாகல (மயிலத்தமடு )சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும்.

ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் கொடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல்,பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மட்டக்களப்பு திம்புலாகல (மயிலத்தமடு )பகுதியில் வாழும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

திம்புலாகல (மயிலத்தமடு ) பகுதி பாரம்பரிய சிங்கள கிராமமாகும். விடுதலை புலிகள் சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இன பரம்பலை இல்லாதொழித்தார்கள்.

திம்புலாகல (மயிலத்தமடு ) சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே திம்புலாகல சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள -தமிழ் இன முரண்பாடு தோற்றம் பெறும் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.