யுத்தம் காரணமாக 25,363 பாதுகாப்பு தரப்பினர் பலி

242 0

யுத்தம் காரணமாக, 1972ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு காலப்பகுதி வரையில் 25 ஆயிரத்து 363 பாதுகாப்பு தரப்பினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவினரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

வாய்மொழி மூல கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேகாரணத்துக்காக குறித்த காலப்பகுதியில் 38 ஆயிரத்து 675 படையினர் அங்கவீனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் யாப்புக்கு பொருத்தமில்லாதவை என்று அறிந்தும், வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும் ஐரோப்பிய ஒன்றியமும் அழுத்தம் கொடுக்குமாக இருந்தால், அது நாட்டின் இறைமைக்கு எதிரானது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனை நாடாளுமன்றத்தில் வைத்து கூறியுள்ளார்.

அரசாங்கத்தை தற்போதுள்ள யாப்பினை மீறி செயற்படுமாறாக சர்வதேச அமைப்புகள் கோருகின்றன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை இன்னும் தயாரிக்கப்படாத புதிய அரசியல் யாப்பு தொடர்பில், சிலர் அரசியல் சுயலாபத்துக்காக போலியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஒற்றையாட்சிக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை வழங்கலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் விஜயதாஸ கூறியுள்ளார்.