மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை…(காணொளி)

275 0

 

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கல்குடா பகுதியில் நடைபெற்றுவரும் மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்களைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆறு கிலோமீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் துரத்தப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து ஏறாவூர் மற்றும் கல்குடா பொலிஸ் நிலையங்களில் குறித்த ஊடகவியலாளர்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்ததை அடுத்து, இருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.

இதன்போது இருவருக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்த நீதிபதி முறைப்பாட்டாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் விடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் கல்குடா பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் நீதிபதி கடுமையான எச்சரிக்கையினைவிடுத்துடன் பொலிஸார் ஒருபக்க சார்பாக செயற்பட முற்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் சார்பில் பிரபல சட்டத்தரணி என்.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் அதனை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மேற்பார்வைசெய்யவேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.