மதத் தலைவர்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாம்

99 0

பேராயர் கர்தினாலுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையே பரஸ்பர கருத்து வேறுபாடு உள்ளதாக தெரிவித்திருப்பது பாரதூரமான விடயம்.

இவ்வாறு மதத் தலைவர்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

டி.டபிள்யூ. ஜேர்மன் அலைவரிசைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலில் பேராயர் கர்தினாலுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையே பரஸ்பர கருத்து வேறுபாடு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவ்வாறான எந்த பரஸ்பர முரண்பாடுகளும் இல்லை என   ஆயர் ஹரல்ட் அந்தனி ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பதாகும். அதனை செயற்படுத்த ஏன் முடியாமல் இருக்கிறது.

அத்துடன் சர்வதேச விசாரணை தேவை இல்லை என ஜனாதிபதி அந்நேர்காணலில் தெரிவித்திருந்திருந்தார். ஆனால் சர்வதேச விசாரணை ஒன்றை பெற்றுத்தருவதாக அவர்தான் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் இவ்வாறான சர்வதேச விசாரணை அவசியமானது என தெரிவித்த அவர், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எப்படி அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற முடியும்.

கர்தினால் மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்பதுடன்

சனல் 4  காணொளி தொடர்பில் பாராளுமன்றக் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் எவருக்கும் நம்பிக்கை இல்லை.

தொடர்ந்தும் தேசிய பொறிமுறையில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. எமது பிரச்சினையை தேசிய பாெறிமுறைக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் இருந்துவந்தேன்.

ஆனால் தற்போதுள்ள நிலையில் எங்களுக்கும் தேசிய பொறிமுறை குறித்து நம்பிக்கை இல்லை . மதத் தலைவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது பெரும் பாவமாகும். அதனை செய்யக்கூடாது.

எனவே உயிர்த்த ஞாயிறு விவாதத்தில் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பில் புதிய விசாரணை தேவை. இதற்கு சர்வதேச தொடர்பையும்  ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.