நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல்! கொடூரமான இனவெறிக்கு உதாரணம்

211 0

நீதிபதியின் பதவி விலகல் தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதுடன், இலங்கை ஜனாதிபதியின் “நல்லிணக்கம்” என்ற பேச்சு மனித நேயத்தை அவமதிக்கும் செயலாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நீதிபதி சரவணராஜாவின் நீதித்துறை தார்மீக தைரியத்திற்கு தலை வணங்கும் அதேநேரத்தில் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நீதிபதி பதவி விலகியமை தெடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 23, 2013 அன்று, நீதிபதி டி.சரவணராஜா முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி, நியாயாதிபதி பதவி, குடும்ப நீதிமன்ற நீதிபதி பதவி, முதன்மை நீதிமன்ற நீதிபதி பதவி, சிறிய உரிமைகோரல் நீதிமன்ற நீதிபதி பதவி, மற்றும் சிறார் நீதிமன்ற நீதிபதி பதவி ஆகிய பதவிகளிலிருந்து பதவிவிலகல் செய்துள்ளார்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், அவர் பதவிவிலகல் செய்ததற்கு, “எனது உயிருக்கு அச்சுறுத்தல்” மற்றும் “அதிக மன அழுத்தம்” காரணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர்மலை விகாரை விவகாரம் தொடர்பாக அவர் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே நீதிபதி சரவணராஜா உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னைய நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தார்கள் என்றும், இந்துக்களின் இடத்தில், ஜூலை 14, 2022க்குப் பிறகு கட்டப்பட்ட தூபி உட்பட அனைத்து புதிய கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும் என்றும் அவர் ஒரு தீர்ப்பை வழங்கினார்.

கொலை மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள்
தொல்பொருள் கண்டுபிடிப்பு என்ற பொய்யான சாக்குப்போக்கின் கீழ், சிங்கள இனக்குழுவை உள்ளடக்கிய இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, தற்போதும் கூட, இந்து கோவில்களை முழுமையாக அழித்து, புத்த கோவில்களாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

14 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட, தமிழ் வரலாற்றுப் பகுதிகளில் பல பௌத்த விகாரைகள் அண்மையில் கட்டப்பட்டுள்ளன அல்லது இந்த தமிழர் பகுதிகளில் அடக்குமுறை மிக்க பெருமளவிலான இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் தீவிர ஆதரவுடன் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வரும் தமிழ்பிரதேசங்களில் பௌத்தர்கள் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கோயில்கள் மட்டுமல்ல, தமிழ் நீதிபதிகளும் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொண்டனர் – தொடர்ந்து எதிர்கொண்டுள்ளனர் என்பதை இப்போது நாம் அறிவோம்.

நீதிபதி சரவணராஜா தனது தீர்ப்பின் பின்னர், தனக்கு கொலை மிரட்டல்கள் மற்றும் கடுமையான அழுத்தங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர்மலை விகாரை தீர்ப்பு
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சரத் வீரசேகர மற்றும் பேரினவாத சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக நீதிபதி சரவணராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விகாரையின் தீர்ப்பு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்தி தமக்கு எதிராக இரண்டு சட்ட நடவடிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் அவரைப் பின் தொடர்ந்ததாகவும், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு தீர்மானத்தை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதி சரவணராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, தான் மிகவும் நேசித்த அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் பதவிவிலகல் செய்வதாகக் குறிப்பிட்டு தனது அறிக்கையை முடித்தார்.

மேற்கூறிய சம்பவம் – ஒரு மூத்த தமிழ் நீதிபதி தனது பல நீதித்துறை பதவிகளில் இருந்து விலக்குமளவுக்கு அச்சுறுத்தப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு உள்நாட்டு பரிகாரம் இல்லை என்பது மட்டுமல்லாமல் தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது . இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “நல்லிணக்கம்” என்ற பேச்சு மனித நேயத்தை அவமதிக்கும் செயலாகும்.

இலங்கையின் கடந்த கால ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் பெற்றிருக்கக்கூடிய சிறந்த நபர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என சில சர்வதேச சக்திகள் கூறுகின்றன. ராஜபக்ச மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் இழுக்கப்படும் ஒரு பொம்மை ஜனாதிபதி விக்ரமசிங்க என்பது நிதர்சனமான உண்மை.

இந்த சமீபத்திய சம்பவம் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இயலாமையை தெளிவாககாட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக, எந்தக் குற்றமும் செய்யாமல், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியதற்காகத் தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் ஒரு தமிழனின் இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றல்ல, இது இலங்கைத் தீவில் நிலவும் கொடூரமான இனவெறிக்கு மிகச் சமீபத்திய உதாரணம் மட்டுமே.

இலங்கைத் தீவில் தமிழர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் இனப்படுகொலையின் வரலாற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால், மனிதஉரிமைகள் பேரவையின் சர்வதேச குற்றங்கள் – இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் – இறுதிக்கட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டஉள் விசாரணை என்பன ஒரு கொடூரமான நகைச்சுவை மட்டுமல்ல, மனித உரிமைகள்பேரவையின் நேர்மையையும் கேள்விக்குஉட்படுத்துகிறது.

இலங்கையில் உள்ளநீதித்துறையின் தமிழ் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு பாதுகாப்பற்றவர்களாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் சுதந்திரமாகப் பேசவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள் என்றுமனித உரிமைகள் பேரவை எவ்வாறு எதிர்பார்க்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.